Aarumuga Anthathi
ஆறுமுக அந்தாதி
முருகனின் புகழ் பாடவும், அவனைத் துதி பாடவும் எத்தனையோ வழிமுறைகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றன. அருணகிரிநாதர் உள்ளிட்ட அநேகம்பேர் ஆறுமுகத்தானுக்கு பாமாலைகள் பல சூட்டி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். கவிஞர் வாலி தமக்கென்று வகுத்துக் கொண்டிருக்கும் தனி பாணியில், கட்டளை கலித்துறை வழியே கந்தனைப் பாடி களிப்புற்றிருக்கிறார். நூறு பாக்கள் அடங்கிய இந்த அந்தாதி நூலில் முருகனின் அருமை பெருமைகளை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர். கரடுமுரடான வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமின்றி, எளிமையான வரிகளால் மாலன் மருமகனாம், மான்மகள் வள்ளி மணவாளனாம் வேலனின் வனப்பை ஒவ்வொரு பாடலிலும் கவிஞர் வாலி வர்ணிக்கும் பாங்கு, படிக்கும்போதே ஆறுமுகனை கண்முன் நிறுத்துகிறது.
இங்கும் இருப்பான்; இதுபோல் இதேநேரம் இன்னோரிடம் அங்கும் இருப்பான்; அதுபோல் அதேநேரம் அம்புவிமேல் எங்கும் இருப்பான்; எதையும் இயக்கி எதனுள்ளிலும் தங்கும் உயிராவான் தேவானை கேள்வன் தணிகைவேந்தே! _ இது ஒரு துளி பதம். இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கருத்தைத் தாங்கி நிற்கும் கவிதைப் பெட்டகம் இந்நூல்! கவிஞரின் பாக்களுக்கு பெரும் புலவர் ம.வே.பசுபதி எழுதியிருக்கும் உரை இந்த நூலுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு பாடலும் தெரிவிக்கும் மையக் கருத்தை உரையின் முதல் பத்தியில் சுருங்க விளக்கிவிட்டு, பின்னர் அந்தப் பாடலில் பொதிந்திருக்கும் எண்ணங்களை தேவையான மேற்கோள்களுடன் விளக்கியிருக்கிறார். முதலில் பாடலைப் படித்து, பின்னர் உரையைப் படித்து முடித்ததும் மீண்டும் ஒருமுறை பாடலைப் படிக்கத் தூண்டும் வகையில் புலவரின் உரை அமைந்திருக்கிறது. முருக பக்தர்கள் பாராயணம் செய்யவேண்டிய நூல் இது!
Reviews
There are no reviews yet.