Ayudha Poojai
ஆயுத பூஜை
எந்தச் சமூகச் சூழ்நிலையிலும், பிரஜைகள் ஒவ்வொரு வரும் சமூகத்தின் பாதுகாவலர் தாமே என்று உணர்கிற வரை போலீஸ் என்ற அமைப்பு இருந்தே தீரும்.
ஒரு காலத்தில் எனது உறவினர்களில் சிலர் போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் பிரிட்டிஷ்காரரின் அடிமைப் போலீஸ் அதிகாரிகளாகத்தான் செயல்பட்டனர். இருப்பினும் அவர்களின் தரமும் ஒழுக்கமும் மனிதாபிமானமும் இக்காலத்தினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிக உன்னதமாகவே இருந்ததாய்த் தோன்றுகிறது. அத்தகைய உயர் பண்பினை சுதந்திரமடைந்த ஒரு தேசத்தின் போலீஸ் துறை இழந்து நிற்கிறதே எனும் ஆதங்கம் எனக்கு உண்டு.
போலீஸ்காரர்கள் மக்களின் நண்பனாக இருப்பதை விடவும் அரசாங்க ஆணைக்கு உட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதை நானறிவேன். எனினும் ஒரு சுதந்திர நாட்டில், ஜனநாயக சமூகத்தில் அவர்கள் மக்களை மிரட்டுகிறவர்களாக ஆகிவிடலாகாது. அவர்கள் சவால் அறிக்கை விடுகிற அரசியல்வாதிகளாகி விடக் கூடாது. சமூக அறிவாளிகளோடு மோதுகிறவர்களாகி விடக்கூடாது என்ற கருத்துக்களை ஒரு போதும் போலீஸார் தவறாகவே புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
‘ஆயுதமும் அதிகாரமும் சட்டத்தின் துணையும், அரசாங்கத்தின் பலமும் கொண்ட போலீஸ் எவ்வளவு இன்முகத்துடன் நன் மொழிகளுடன் மக்களை அணுக வேண்டும்!’ என்றெல்லாம் என்னை யோசிக்க வைத்த நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நிகழ்ந்தன. அவை தேச-சர்வதேச கவனத்தை ஈர்ந்தன.
தற்காலச் சமூக நிகழ்வுகளின் போக்கை மையக் கருவாய்க் கொண்டு சமூகத்துக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை போலவும், வேண்டுகோள் போலவும், பிரார்த்தனை போலவும், சாபம் போலவும் சில கதைகளை நான் அண்மைக் காலமாய் எழுதி வருகிறேன். அவற்றுக்கு நற்பலன்கள் ஏற்பட்டும் வருகின்றன.
எனக்கு வன்முறை ஆயுதங்களின் மீது நம்பிக்கையும் இல்லை; மரியாதையும் இல்லை. அவை சிறிய ஆயுதங்களாயினும் சரி, உலகையே தகர்க்கும் நவீன அணு ஆயுதங்களாயினும் சரி, அவற்றால் மனிதனைத் திருத்தவோ வெல்லவோ முடியாது. அந்த யுகம் மறைந்து போயிற்று.
அரிவாளும் சுத்தியலும் எந்த நவீன தொழில் நுட்ப காலத்திலும் மனிதனின் பணிகளுக்குப் பயன்படும். துப்பாக்கிகளும், அணு நீயூட்ரான் ஆயுதங்களும் எதிர் காலத்தில் பூசைக்குரிய துர்த்தேவைகளின் சின்னங்களாகத்தான் கருதப்படும் என்பதே இக்கதையின் விரிந்து பரந்த நோக்கம்.
அரசாங்கத்தைக் கூட நான் எதிரியாகக் கருத வேண்டிய நேரங்கள் நேர்ந்துள்ளன. போலீஸை நான் எனது எதிரியாக எண்ணியதே இல்லை. மாறாக மறக்க முடியாத பல நண்பர்கள் போலீஸைச் சேர்ந்தவர்களாய் இருந்துள்ளனர். அவர்கள் பணிக்கும் எனது நட்புக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளாத கடமையுணர்ச்சியில் சிறந்த ஊழியர்கள் அவர்கள்.
அத்தகு கடமை தவறாத பெருமைக்குரிய போலீஸ் ஊழியர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்வது எனக்கு அவர்கள்பால் உள்ள அன்பின் அடையாளம். இரக்கமற்ற போலீஸால் உயிரிழந்த இளைஞர்களுக்கு அர்ப்பணிக்க ஒரு கதை போதாதே! இது வெறும் கதையும் அல்ல.
அன்பு,
த. ஜெயகாந்தன்
Reviews
There are no reviews yet.