Moongil Kottai
மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை’ என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங்கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி மறைத்து வைத்ததால், சேரனை விடுவிக்க வந்த யானைப் படைகள் அந்த அகழிகளில் வீழ்ந்து அழிந்து போனதாக வரலாறு கூறுகிறது.
இத்தகைய கொடுஞ்சிறையினின்று யானைக்கண்சேய் தந்திரத்தால் தப்பியதாகவும் குறிப்புகள் காணப் படுகின்றன. இக்குறிப்புகளை, “பண்டை நாளையச் சேர மன்னர்கள்” என்ற வரலாற்று நூலில் பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் மிகத் தெளிவாகத் தந்திருக்கிறார்கள். சேரனிடம் அன்பு மிக்க குறுங்கோழியூர்க்கிழார் என்ற புலவர், சோமான் தப்பியது குறித்துப் பாடிய சிறப்புப் பாடல்களும் மேற்படி வரலாற்று நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தவிர இந்த மூங்கில் கோட்டை சம்பவத்தைப் பற்றி ஸ்ரீ புஞ்சா முதலிய ஆசிரியர்களும் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள்.
இந்த வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்தான் மூங்கில் கோட்டை.’ இதில் கதாநாயகன், கதாநாயகி, சித்தர், பாண்டிய சேனாதிபதி ஆகியவர் களைத் தவிர மற்றவர்கள் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இந்தச் சிறு வரலாற்று நிகழ்ச்சி யைப் பெரும் கதையாகவும், நவரசங்களும் இணையும்படியாகவும் அமைக்க, கூடியவரை கற்பனையை ஒட்டியிருக்கிறேன். இந்த நவீனம் மலேசியா நாட்டின் ‘தமிழ் நேசன்’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தது.
மலேசிய நாட்டு மக்கள் பெரிதும் ரசித்த இந்த நவீனம் இப்புத்தக வாயிலாகவும் மக்களுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் வழக்கம்போல் இந்தப் புத்தகத்துக்கும் ஆதரவு தருவார்களென்பதில் ஐயமில்லை. இந்த நவீனத்தைத் தொடர்கதையாகப் பிரசுரித்த ‘தமிழ்நேசன்’ காரியாலயத்துக்கும், புத்தக வடிவில் கொண்டு வந்த வானதி பதிப்பகத்துக்கும் எனது நன்றி உரித்தாகும்.
Reviews
Clear filtersThere are no reviews yet.