Raniyin Kanavu
ராணியின் கனவு
பாலைவனமே பல காதங்களுக்குப் பரவிக் கிடந்ததால் மாரூஸ்தலி என்று பிரபலமான அந்த வெண்மணற் பரப்பிலும், பஞ்சநதி ஓரமாகக் கிடந்த வராஹகுல ராஜபுத்திரர்களின் தலைநகரம் மட்டும் செடி கொடிகளுடன் சற்றே செழித்துக் கிடந்ததால், அந்தி ஆதவன் அந்தத் தலைநகரத்துப் புஷ்பச் சோலையை வெகு ஆசையுடன் தழுவிக் கொண்டிருந்தான்.
அதன் விளைவாகப் பொன்னிறம் பெற்ற மஞ்சள் நிறச் செண்பக மலர்கள் தங்கள் பக்கத்தே நடந்து சென்ற சந்திரமுகியின் கன்னங்களை மெல்ல மெல்லத் தடவிக் கொடுத்தாலும் அவற்றை ஏறெடுத்துப் பார்க்காத அந்த வராஹ குல ராஜகுமாரி, வெறித்த பார்வையுடன் அந்தச் செடிகளைத் தாண்டி நடந்து கொண்டிருந்தாள். அவள் வெறித்த பார்வையில் ஒரு கலக்கம் இருந்தது. சற்றே தளர்ந்த நடையில் ஓர் அசதி தெரிந்தது. அசதி தரும் பருவமல்ல அது, கலக்கம் தரும் காலமுமல்ல அந்த மனோகர அந்திவேளை. பதினெட்டு வயதேயான அந்த ராஜகுமாரியின் அங்கங்களிலெல்லாம் பருவம் துள்ளி விளையாடவே செய்தது.
ஆனால், அந்தப் பருவத்தின் துடிப்பை, இயற்கைச் சிற்பியின் கரங்கள் செப்பனிட்ட இணையற்ற அழகை பலிதமற்றுப் போகும் படியாக மூன்று ஆண்டுகளாக எழுந்து அவள் புத்தியைக் குழப்பிக் கொண்டிருந்த துன்ப அலைகளை மட்டும் அடக்க வழி தெரியாமல் அவள் திகைத்தாள்.
ஆண்டுகள் அவள் அழகைச் செப்பனிடச் செப்பனிட அவள் புத்தியும் அந்தப் பழைய துன்பச் சுமையை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததால், அவள் அங்கலாவண் யத்துக்கும் புத்தியின் சேஷ்டைக்கும் சதா ஒரு போர் இருந்து கொண்டே இருந்தது. எந்தக் குற்றத்தையும் செய்யாத அந்த ராஜகுமாரி, அவள் தந்தை செய்த குற்றத்துக்காக உலக அபவாதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
Reviews
Clear filtersThere are no reviews yet.